Monday, October 25, 2010

Special Features of Ramadan Month

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.

நோன்பு காலத்தில் இறைவன் வழங்கிய சலுகைகள்.
1. மாதவிடாய் ஏற்பட்டவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்.
2. நோயாளி : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
3. பிரயாணத்தில் உள்ளவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
4. கர்ப்பிணிப் பெண் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
5. வயது முதிந்தவர்கள் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
6. பால் கொடுக்கும் தாய் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

அல்லாஹ்வும், தூதரும் நோன்பாளிக்கு வழங்கி உள்ள சலுகைக்கான ஆதாரங்களை பார்ப்போம்.
எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை கலாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கலாச் செய்யுமாறு கட்டளை இடமாட்டார்கள் என்று ஆயிஷா(ரழி) கூறினார்கள். நூல் : புகாரி, முஸ்லிம், அபூதாவுத்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க கூடியவர்களாக இருந்தார்கள் அவரது மரணத்திற்கு பின் அவரது மனைவிகள் அந்நாட்களில் இஃதிகாஃப் இருப்பதை தொடர்ந்து நிறைவேற்றினர்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவுத், முஸ்லிம்

ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும்

1. நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ?
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான் அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான் எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள் இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும் அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள் இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 2:187

2. ஊசி போடலாமா ?
உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது.

3. வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ? தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியுமா?
எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : அஹமத், அபூதாவுத்

4. கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் நோன்பை விடலாமா?
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்

5. நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடுமா?
நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும். (அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)

6. நோன்பு எதை கொண்டு திறப்பது ?
நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.

Saturday, October 23, 2010

Explanations for Dreams

6982. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாள்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும்வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், 'ஓதும்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே' என்று அவருக்கு பதிலளித்தார்கள்.
(அப்போது நடந்த சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:)
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு 'ஓதும்' என்றார். அப்போதும் 'நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே' என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு, 'ஓதும்' என்றார். அப்போதும், 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே' என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு 'படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்..' என்று தொடங்கும் (96 வது அத்தியாயத்தின்) வசனங்களை 'மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்' என்பது வரை (திருக்குர்ஆன் 96:1-5) ஓதினார்.
(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, 'எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்' என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டகன்றது. அப்போது, 'கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா(ரலி) அவர்கள், 'அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்' என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின் புதல்வர் 'வரக்கா'விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.
'வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை(ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா அவர்கள், 'என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் 'என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் '(நீர் கண்ட) இவர்தாம் (இறைத் தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்' என்று கூறிவிட்டு 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!' என்று கூறினார்.
இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் 'ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்' என்று பதிலளித்தார்.
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி(ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தோன்றி, 'முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்' என்று கூறுவார்கள். இதைக் கேட்கும்போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்.2
(இந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள 'ஃபலகுஸ் ஸுப்ஹ்' (அதிகாலைப் பொழுதின் விடியல்) என்பதைப் போன்றே குர்ஆனில் 6:96 வது) வசனத்தில் இடம் பெற்றுள்ள) 'ஃபாலிகுல் இஸ்பாஹ்' (என்பதிலுள்ள 'இஸ்பாஹ்') எனும் சொல்லுக்குப் பகலில் சூரிய வெளிச்சம்; இரவில் நிலா வெளிச்சம்' என்று பொருளாகும் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Volume :7 Book :91
6983. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். 3
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :91
6984. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்.
என அபூ கத்தாதா அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.4
Volume :7 Book :91
6985. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :91
6986. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, ஒருவர் கெட்ட கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். தம் இடப் பக்கத்தில் துப்பட்டும். ஏனெனில், அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.
என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
Volume :7 Book :91
6987. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.5
என உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :91
6988. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தும் வந்துள்ளது.
Volume :7 Book :91
6989. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :91
6990. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நற்செய்தி கூறுகின்றவை ('முபஷ்ஷிராத்') தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை' என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் 'நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் 'நல்ல (உண்மையான) கனவு' என்று விடையளித்தார்கள்.
Volume :7 Book :91
6991. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(நபித் தோழர்களில்) சிலருக்கு 'லைலத்துல் கத்ர்' (எனும் மகத்துவமிக்க) இரவு (ரமளான் மாதத்தில்) கடைசி ஏழுநாள்களில் தேடிக் கொள்ளுங்கள்' என்றார்கள்.6
Volume :7 Book :91
6992. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைத்தூதர்) யூசுஃப்(அலை) அவர்கள் (சிறையில்) கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்து, பிறகு (அவரிடம் வந்ததைப் போன்றே) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.7
Volume :7 Book :91
6993. 'கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.8' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
'நபி(ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி(ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)' என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.9
Volume :7 Book :91
6994. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.10 மேலும், இறைநம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :91
6995. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, எவரேனும் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தம் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது. மேலும், ஷைத்தான் என் உருவத்தில் காட்சி தரமாட்டான்.
என அபூ கத்தத்தா(ரலி) அறிவித்தார்.11
Volume :7 Book :91
6996. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார்.
என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.
இது மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
Volume :7 Book :91
6997. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :91
6998. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
எனக்கு (ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட) சொற்களின் திறவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளன. (எதிரிகளுக்கு என்னைப் பற்றி (மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நான் உறங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.
இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசென்று (அனுபவித்துக்) கொண்டிருக்கிறீர்கள்' என்றார்கள்.14
Volume :7 Book :91
6999. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இன்றிரவு (இறையில்லம்) கஅபாவின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்களில் மா நிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மா நிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள் வரை நீண்டுள்ள முடிகளில் நீ பார்த்தவற்றிலேயே மிக அழகான தலை முடி அவருக்கு இருந்தது; அந்த முடியை அவர் (படிய) வாரிவிட்டிருந்தார்; அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. 'இரண்டு மனிதர்களின் மீது' அல்லது 'இரண்டு மனிதர்களின் தோள்களின் மீது' சாய்ந்தபடி அவர் கஅபாவைச் சுற்றிவந்துகொண்டிருந்தார். அப்போது நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு, '(இவர் தாம்) மர்யமின் குமாரர் மஸீஹ்(ஈசா)' என்று பதிலளிக்கப்பட்டது. அப்போது நான் நிறைய சுருள்முடி கொண்ட வலக் கண்ட குருடான ஒரு மனிதனையும் பார்த்தேன். அவனுடைய கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. அப்போது நான், 'யார் இவர்?' என்று கேட்டேன். அதற்கு 'இவன்தான் தஜ்ஜால் எனும் மஸீஹ்' என்று பதிலளிக்கப்பட்டது.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.15
Volume :7 Book :91
7000. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இன்றிரவு எனக்குக் கனவு ஒன்று காட்டப்பட்டது...' என்று கூறினார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர் முழு ஹதீஸையும் அறிவித்தார்.16
இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஓர் அறிவிப்பில், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், அல்லது அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிப்பதாக வந்துள்ளது.
மஅமர் இப்னு ராஷித்(ரஹ்) அவர்கள் முதலில் இந்த ஹதீஸை (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அறிவிக்காமல் இருந்தார்கள்; பின்புதான் அறிவிக்கலானார்கள்.
Volume :7 Book :91
7001. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அரும்லுள்ள 'குபா'வுக்குச் சென்றால் தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒரு நாள் (பகலில்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் அவர்களுக்கு பேன் பார்த்து விடலானார். அப்போது நபி(ஸல்) அவர்கள் உறங்கிவிட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.
Volume :7 Book :91

Friday, October 22, 2010

குர்ஆனின் முன்னறிவிப்புகள்

1. கஃபா (அபய பூமி)
2. மனிதர்களால் நபிகள் நாயகத்தை கொல்ல முடியாது
3. பாதுகாக்கபட்ட ஃபிர்அவ்னின் உடல்
4. நவீன வாகனங்கள் பற்றிய முன்அறிவிப்பு
5. நபிகள் நாயகத்தின் (ஸல்) எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்
6. ரோம் சாம்ராஜ்யம் சில ஆண்டுகளில் வெற்றி பெறும்
7. மக்காவை நபிகள் நாயகம் வெற்றி கொள்வார்கள்
8. அபூலஹபின்அழிவு
9. உலகின் பல பகுதிகளிலிருந்து கனிகள் மக்காவிற்கு வந்து சேரும்
10. விண்வெளிப் பயணம்
குர்ஆன் என்னும் பெயர்
வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும் குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

திருக் குர்ஆனிலே திருக் குர்ஆனைக் குறிக்கும் பெயர்கள் பலவற்றைத் தனியே ஒரு பக்கத்தில் தந்துள்ளோம்.அருளப்பெற்ற நாள்
நபிகள் பெருமானார் அவர்களுடைய நாற்பதாவது வயதிலே, ரமளான் மாதத்தின் பிந்திய இரவுகளில் ஓர் இரவன்று, மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையிலே தனித்திருந்து, இறைவனைச் சிந்தித்திருந்த நேரத்தில் தான் திருக் குர்ஆன் முதன் முதலாக அருளப் பெற்றது. அந்த இரவு தான் “லைலத்துல் கத்ர்” (கண்ணியமிக்க இரவு) என்று அறியப்படுகிறது.

மாண்புமிக்க அந்த இரவிலே முதன் முதலாக அருளப் பெறத்துவங்கிய இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.

இவ்வாறு அந்த 23-ஆண்டுகளில் இறைவனால் அறிவிக்கப்பட்டதே திருக் குர்ஆன். குர்ஆனின் அமைப்பு
திருக்குர்ஆன் 3 வசனங்கள் முதல் 286 வசனங்கள் வரையிலுமுள்ள, சிறிய, பெரிய 114 அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

திருக் குர்ஆனில் உள்ள வசனங்களும், அத்தியாயங்களும் இப்பொழுதுள்ள வரிசைக்கிரமப்படி அருளப் பெறவில்லை.

கால நிலைமைக்கும், மக்களின் தேவைக்கும் அவசியமான அளவு சிறிது, சிறிதாக அத்தியாயங்களாகவும், வசனங்களாகவும், அருளப் பெற்று வந்தன. இவ்வாறு அருளப் பெற்று வரும் காலத்தில், நபி பெருமானார்களுக்கு, இறைவன் கற்பித்ததற்கிணங்க, இன்னின்ன வசனங்கள், இன்னின்ன அத்தியாயங்களை சேர்ந்தவையெனவும், அதிலும் குறிப்பிட்ட வசனம், குறிப்பிட்ட அத்தியாயத்தில் எத்தனையாவது வசனம் எனவும் அறிவித்து வந்தார்கள். அந்த ஒழுங்கு முறைப்படி அமைக்கப் பெற்றது தான், இக்காலத்தில் நம்மிடத்தில் இருக்கும் திருக் குர்ஆன்.

இந்த அமைப்பு முறைக்கு, “தௌகீஃபீ” (அறிவிப்புப்படி அமைக்கப் பெற்றது) என்றும், “தர்தீபே திலாவதி” (ஓதக்கூடிய வரிசை) என்றும், “தர்தீபே ரஸுலி” (ரஸுலுடைய வரிசை) என்றும் கூறப்பெறுகின்றது.

தவிர, திருக் குர்ஆனின் வசனங்களும், அத்தியாங்களும் அருளப் பெற்ற முறைக்குத் “தர்தீபே நுஜுலி” (அருளப் பெற்ற வரிசை) என்று கூறப்பெறுகின்றது.

Sunday, October 3, 2010

Importance of Haj

மக்காவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று சில கிரியைகளைச் செய்வது ஹஜ் எனப்படுகின்றது. வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு தடவை ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும்.

அல்லாஹ்வுக்காக அந்த ஆலயம் சென்று ஹஜ் செய்வது மனிதர்களில் அதன் பால் (சென்றுவர) சக்தி பெற்றவர் மீது கடமையாகும். அல்குர்ஆன் 3 : 97

மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஓவ்வொரு ஆண்டுமா?” என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகிவிடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ