Monday, January 3, 2011

Great Features of Haj

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்)பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப்போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாகஇருக்கின்றான். அல்குர்ஆன் 3:96-97

ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறை வேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன. இது பற்றி பல ஹதீஸ்களை நாம் காண முடிகின்றது.

அமல்களில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது” என்று விடையளித்தார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது” என்றார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

“ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் பலவீனனாக இருக்கிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “யுத்தமில்லாத ஜிஹாதுக்கு செல்வீராக! அதுதான் ஹஜ்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் பின் அலி (ரலி) நூல் : தப்ரானி
அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்;” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்; : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

“உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

என் உள்ளத்தில் அல்லாஹ் இஸ்லாத்தை ஏற்கும் எண்ணத்தை ஏற்படுத்தியவுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று “உங்கள் கையை விரியுங்கள்! உங்களிடம் பைஅத் (உறுதி மொழி) எடுக்க விரும்புகிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் கையை நீட்டியதும் என் கையை நான் மடக்கி கொண்டேன். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்துவிட்டது” என்று கேட்டார்கள். “ஒரு நிபந்தனையின் அடிப்படையிலேயே நான் பைஅத் செய்வேன்” என்று நான் கூறினேன். “என்ன நிபந்தனை?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “(என் பாவங்கள்) மன்னிக்கப்பட வேண்டும் (என்பதே நிபந்தனை)” என்று நான் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “இஸ்லாத்தை ஏற்பது அதற்கு முன்னுள்ள பாவங்களைத் தகர்த்து விடுகிறது; ஹிஜ்ரத் செய்வது அதற்கு முன்னுள்ள பாவங்களைத் தகர்த்து விடுகிறது; ஹஜ் அதற்கு முன்னுள்ள பாவங்களைத் தகர்த்து விடுகிறது என்பதை நீர் அறிந்திடவில்லையா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அம்ருபின் ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம்

ஹஜ் செய்பவர், உம்ராச் செய்பவர், போரில் ஈடுபட்டவர் ஆகிய மூவர் அல்லாஹ்வின் விருந்தினராவர் என்பது நபிமொழி
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : இப்னுஹிப்பான், இப்னுமாஜா

ஹஜ் செய்பவர்களும் உம்ராச் செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினராவர். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான் என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : நஸயீ, இப்னுமாஜா

இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் அறிவிக்கின்றன.

அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுவதும், கேட்டவையாவும் கிடைப்பதும், மறுமையில் சுவனத்தைப் பரிசாக அடைவதும் உண்மை முஸ்லிம்களுக்குச் சாதாரண விஷயம் இல்லை.

No comments:

Post a Comment